×

மஹா சிவராத்திரி விழாவில் 12 மணி நேர நாட்டிய நிகழ்ச்சி

ராமநாதபுரம், மார்ச் 6: சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் பல கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாநில கலை, பண்பாட்டுத் துறை சார்பில் முதன்முறையாக சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயிலில் 12 மணி நேர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை துவங்கிய நாட்டிய நிகழ்ச்சிகள் நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. நாடுமுழுவதும் 10க்கும் மேற்பட்ட பரத நாட்டிய குழுவினர் கலந்து கொண்டனர்.300 நாட்டிய கலைஞர்கள், இசைகலைஞர்கள் கலந்து கொண்டனர். ஸ்வர்ணமால்யா, ஊர்மிளா சத்தியநாராயணன், சைலஜா என புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இதனை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

தொண்டி: பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோயிலை கிராம மக்கள் புதுப்பித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வழிபட்டு வருகின்றனர். தற்போது இக்கோயில் அறநிலையத்துறை வசம் உள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த அன்னபூரணி சமேத நம்புஈஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. மேலும் விடிய விடிய சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பெண் பக்தர்கள் சிவபுராணம் பாடினர். சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : dance event ,festival ,Maha Shivarathri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...