×

காவிரி குழாயில் கண்ட இடங்களில் உடைப்பு

ராமேஸ்வரம், மார்ச் 6: ராமேஸ்வரம் வரும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாம்பன் பாலத்தில் குடிதண்ணீர் வெளியேறி வீணாவதுடன் பாலத்தின் கட்டுமானமும் சேதமடைந்து வருகிறது.ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் காவிரி குடிநீர் மண்டபத்தில் இருந்து நிலத்தடி குழாய்களின் வழியாக கொண்டு வரப்படுகிறது. மண்டபம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரிநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீரேற்று நிலையத்தில் இருந்து நிலத்திற்குள் குழாய் பதித்து கொண்டு வரப்படும் தண்ணீர், பாம்பன் பாலத்தில் 20 செ.மீ விட்டமுள்ள நீரேற்று குழாய்களின் மூலம் பாம்பன் அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.அக்காள்மடம் தொட்டியில் இருந்து பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளுக்கும், ராமேஸ்வரம் பேருந்து நிலைய வளாக தொட்டியில் இருந்து ராமேஸ்வரம் நகர் பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மண்டபத்தில் இருந்து அக்காள் மடம், ராமேஸ்வரம் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நிலத்திற்குள் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வெளியேறுவதும். பாம்பன் பாலத்தில் நடைமேடை வழியாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் பல இடங்களில் குடிநீர் வெளியேறி கடலில் கொட்டும் சம்பவமும் தொடர்ந்து நடக்கிறது.

தரம் குறைந்த குழாய்கள் நிலத்திலும், பாம்பன் பாலத்திலும் அமைக்கப்பட்டதால் அடிக்கடி இக்குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் மாதத்தில் பல நாட்கள் தண்ணீர் வினியோகத்தில் தடை ஏற்படுவதுடன், குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீர் செய்யவும் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. பாம்பன் பாலத்தில் நடைமேடைக்குள் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் ஆங்காங்கே குடிநீர் வெளியேறி கடலில் விழுந்து வீணாகி வருவதுடன், இதனால் பாலத்தின் கட்டுமானத்திலும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பாம்பன் சாலைப் பாலம் பல கோடி ரூபாய் செலவில் முழுமையாக மராமத்து செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி நீரேற்று குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் குடிநீர் வெளியேறுவதால் பாலத்தில் சிமென்ட் காரைகள் ஊறிப்போய் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் தூண்கள் சேதமடையும் நிலை உருவாகி வருகிறது. பாம்பன் பாலத்தில் காவிரி நீரேற்று குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டதாகவும், குழாய்களில் எவ்வித கசிவும் இன்றி ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக ராமநாதபுரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த பிப்.17 ம் தேதி தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று வரை பாம்பன் பாலத்தில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் நீர்கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாவது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்து வரும் கோடை காலத்தில் தடையின்றி குடிதண்ணீ வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Cauvery ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...