×

அதிகாரிகளின் மெத்தனத்தால் பாம்பன் சாலை பாலத்தில் பல இடங்களில் விரிசல்

மண்டபம், பிப்.20: அதிகாரிகள் மெத்தனத்தால் பாம்பன் சாலை பாலத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் ரோடு பாலம் கடல் மேல் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இதில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் சுமார் ரூ.18 கோடியே 43 லட்சம் நிதியில் அனைத்து தூண்களிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டது.

மேலும் ரோடு பாலத்தின் இரு புறங்களிலும் புதிதாக 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வைக்கப்பட்டு எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்பட்டன.
கடல் நடுவில் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் வழியாக தினந்தோறும் ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பாம்பன் சாலை பாலத்தில் அதிகாரிகள் சில மாதங்களாக முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் பாலத்தின் தடுப்பு சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது. மேலும் பாம்பன் பாலத்தில் இரவு நேரத்தில் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் தீவுபகுதி மக்களுக்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ஊழியர்கள் பிளாட்பாரத்தை அகற்றிவிட்டு அதை மூடாமல் அப்படியே விட்டுச் செல்வதால் கடல் அழகை ரசிக்க நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கால் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பாம்பன் பாலத்தை அதிகாரிகள் முறையாக சுத்தம் செய்யாததால் பல்வேறு இடங்களில் குப்பைகள் காணப்படுகிறது. எனவே ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அதிகாரிகள் கவனம் செலுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pamban Road Bridge ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் ‘ஸ்பிரிங்...