×

தாசில்தார் பணிமாறுதலில் சென்றதால் தாலுகா அலுவலகத்தில் தேங்கிய சான்றிதழ்கள் அரசின் சலுகை பெறமுடியாமல் பலரும் தவிப்பு

திருவாடானை, பிப்.8: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் மாறுதலாகி சென்றதால், கடந்த ஒரு மாதமாக சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாதி,வருமானம், இருப்பிடம், விதவைச் சான்று, சிறுகுறு விவசாயிகள் சான்று போன்ற பலதரப்பட்ட சான்றிதழ் வாங்க இ.சேவைகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றுகளை பெற்று வந்தனர். பெரும்பான்மையான சான்றுகள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஆன்லைனில் பரிந்துரை செய்வார்கள். பின்னர் மண்டல துணை தாசில்தார் ஆன் லைனில் சான்று வழங்குவார். இதனால் தாமதமின்றி சான்றுகள் கிடைத்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த மண்டல துணை தாசில்தார் வேறு இடத்துக்கு பணி மாறுதலில் சென்று விட்டார். இதனால் அந்த இடம் தற்போது காலியாகவே உள்ளது. கடந்த ஒரு மாதமாக ஆயிரக்கணக்கானோர் சான்றிதழுக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். காலியாக உள்ள பணியிடத்தில் வேறு ஒருவரை நியமிக்காமல் சான்றிதழ்கள் அனைத்தும் தேங்கி கிடக்கிறது.
இதனால் போட்டி தேர்வு மற்றும் திருமண உதவித் திட்டத்திற்கு, சாதி, வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து திருவாடானை பொதுமக்கள் கூறுகையில், முன்பு கையால் எழுதப்பட்ட சான்றுகளை வழங்கினார்கள். உடனுக்குடன் சான்று கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஆன்லைனில் சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு தேவையான சான்றுகள் விரைவாகவே கிடைத்து வந்தன. ஆனால் இப்போது சான்று வழங்க வேண்டிய துணை தாசில்தார் பணியிடம் காலியாக உள்ளது அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், 15 தினங்களுக்கு முன்பே சாதி வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும். ஆனால் இங்கு சான்றிதழுக்கு விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் கிடைக்காததால் பல பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தில் நிதி உதவி இல்லாமல் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.  தேவையான நேரத்தில் சான்றிதழ் வழங்காமல் அந்த பணி இடத்தை காலியாக வைத்திருப்பதால், அரசின் எண்ணற்ற திட்டங்களை பெறமுடியாமல் பொதுமக்களும் மாணவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடத்தை வேறு ஒருவரை நியமித்து தடையின்றி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Tashilda ,bureau ,
× RELATED ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர், உதவியாளர் கைது