×

தெருநாய்கள் தொல்லையால் அச்சத்தில் பொதுமக்கள்

திருவாடானை, ஜன. 30: திருவாடானையில் தெருநாய்கள் அதிகரித்து தொல்லை கொடுப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவாடானை வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். இங்கு நீதிமன்றம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கல்வி அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பல்வேறு வேலைகளுக்கு தினமும் இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அனைத்து வகை அரசு அலுவலகங்கள் இருந்தபோதிலும் இன்னும் திருவாடானை ஊராட்சி ஆகவே இருந்து வருகிறது. இதனால் போதுமான நிதி கிடைக்காமல் வளர்ச்சிப் பணிகளை அதிகளவில் செய்ய இயலவில்லை.ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் தெருக்களில் நடமாட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவில் திரிந்த வெறிநாய் ஒன்று பசு மாட்டை கடித்து விட்டது. இதனால் வெறிபிடித்த பசுமாடு பொதுமக்களை விரட்டி கடிக்க துவங்கியது. பின்னர் சிலர் ஒன்று சேர்ந்து அந்த மாட்டை அடித்துக் கொன்று புதைத்தனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. வீதிகளிலும் பேருந்து நிலையத்திலும் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. எனவே கட்டுப்பாடின்றி திரியும் தெரு நாய்களை கண்டறிந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Street folks ,
× RELATED குமரி மாவட்டத்தில் பொதுமக்களை...