×

குப்பைகள் நிறைந்த குப்புசாமி பூங்கா சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ராமநாதபுரம், ஜன.10: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டு அருகே எம்,எஸ்.குப்புசாமி சேர்வை நினைவு பூங்கா உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதால் ஏற்கனவே சிறுவர், சிறுமிகள் உட்பட பொதுமக்கள் அதிகம் பேர் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பூங்காவில் இருந்த விளையாட்டு கருவிகள் சேதமடைந்ததால் சிறுவர், சிறுமிகள் கூட்டம் குறைய தொடங்கியது. பூங்காவில் இருந்த பெரும்பாலான விளையாட்டு கருவிகள் உடைந்த நிலையில் உள்ளதால், சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். நகரில் பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சத்திற்கு வசதிகள் இல்லாததால் பள்ளி விடுமுறை காலங்களில் சிறுவர், சிறுமிகள் இந்த பூங்காவை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பூங்காவை சரி செய்தால் விடுமுறை காலத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் பலர் மதுபானங்களை வாங்கி கொண்டு பூங்காவின் உள்ளே சென்று விடுகின்றனர். பராமரிப்பு இல்லாமல் வீணாகும் பூங்காவை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நல்ல முறையில் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். பாரதி நகர் பாஸ்கரன் கூறுகையில், பூங்காவும் பராமரிப்பு இல்லாததால்  விளையாட்டு கருவிகள் சேதமடைந்து வருகின்றன. மாலை நேரங்களில் பூங்கா காம்பவுன்ட் சுவரில் அமர்ந்து கொண்டு பலர் அரட்டை அடிப்பதால் பூங்கா பக்கம் யாரும் திரும்புவது கூட கிடையாது. முறையான பராமரிப்பு இல்லாததால் சிறுவர் பூங்காவை அவர்கள் பயன்படுத்த முடியவில்லை. ஒருமுறை குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மறுமுறை வர தயக்கம் காட்டுகின்றனர். பகல் நேரங்களில் பலர் சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள செடி கொடிகளை அகற்றி தேவையான வசதிகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : debris kuppusamy park ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை