×

திருவாடானையில் கோயில் குளங்களை தூர்வாருவது எப்போது?

திருவாடானை, ஜன.4: திருவாடானையில் கோயில் குளங்களை தூர்வார அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் ஏராளமான கண்மாய்களும் குளங்களும் உள்ளன. அவற்றில் பல ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி இருந்த இடமே தெரியாத அளவிற்கு மறைந்து போய்விட்டன. சில கிராமங்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் ஊரணிகள் அனைத்தும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகிக் கொண்டே வருகிறது.இதேபோல் இப்பகுதி கோயில்களுக்கு முன்பாக ஏராளமான தீர்த்தக் குளங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள சிறிய காவல் தெய்வங்களுக்கு முன்பாகவும் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட முக்கிய திருத்தலங்கள் உள்ள ஊர்களிலும் கோயில் குளங்கள் உள்ளன.இவைகள் கோயில் குளங்கள் என்பதால் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த குளங்களை தூர்வாரி பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. குறிப்பாக திருவாடானை மையப்பகுதியிலுள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயில் முன்பாக உள்ள தெப்பக்குளம், மங்களநாதன் கோயில் குளம், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் கோயில் முன்பாக உள்ள வாசுகி தீர்த்தகுளம் போன்ற முக்கிய திருத்தலங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் காலங்களில் போதிய அளவு தண்ணீரை தேக்க முடியாமல் வறண்டு போய் விடுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘கோயிலுக்கு செல்லும் போது பக்தர்கள் கோயில் குளங்களில் குளிப்பதை புண்ணியமாக கருதுகின்றனர். ஆனால் பல நேரங்களில் குளங்கள் வறண்டு கிடப்பதால் குளிக்க முடியாமல் போய்விடுகிறது. இதுகுறித்து கேட்டால் குளத்தை தூர்வார நிதி இல்லை என்றும் அதற்கு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர்’’ என்றனர்

Tags : Temple Pond ,Tiruvatanai ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...