×

சித்திரங்குடி சரணாலயத்தில் வறட்சி இடத்தை மாற்றும் வெளிநாட்டு பறவைகள் கடற்கரை, வயல்களில் தஞ்சம்

சாயல்குடி, ஜன.4: சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழகாஞ்சிரங்குளம் சரணாலயத்தில் தண்ணீர் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. சில பறவைகள் திசைமாறி கடற்கரை பகுதி, வயல்களில் தஞ்சமடைந்து வருகின்றன கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம் கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மழைக்காலம் துவங்கும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும்  ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாழைகொத்தி, செங்கால், நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய்மூக்கன், வில்லோவால்பவர், ஆஸ்திரேலியா பிளமிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான வகையான பறவைகள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள் கிடைப்பதால் பல கிமீ மைல் தூரம் பறந்து வருவது வழக்கம். இங்கு கண்மாயிலுள்ள நாட்டுக்கருவேல மரங்களில் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்லும்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் மரங்கள் பட்டுபோய் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. கண்மாய்க்கு நீர்வரத்தின்றி பாலைவனமான காட்சியளிக்கிறது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. சில பறவைகள் கடற்கரை பகுதியான தரவை மற்றும் மாரியூர், கீழமுந்தல், வாலிநோக்கம் வனத்துறை காடுகளில் தஞ்சமடைகின்றன. இவற்றை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதால், வெளிநாட்டு பறவை இனம் அழிந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பறவை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சரணாலயத்தில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் வெளிநாட்டு பறவைகள் வேறு பகுதிக்கு சென்றுவிடுகின்றன. கொக்கு, நாரை உள்ளிட்ட உள்நாட்டு வகை பறவைகள் தண்ணீர் தேக்கம் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள அடர்ந்த புளியமரம், ஆலமரங்களில் தஞ்சமடைந்துள்ளன. எனவே வரும் காலங்களில் இனப்பெருக்கத்திற்காக வருகை தரும் பறவைகளுக்கு தேவையான முன்னேற்பாடு வசதிகளான மரம் வளர்த்தல், தண்ணீர் தேக்குதல் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : shores ,sanctuary ,refugees ,Chirangady ,beach ,
× RELATED பெரியாறு புலிகள்...