×

சாலைகள் சேதமடைவதால் மாட்டு வண்டிகளை மறித்து மக்கள் போராட்டம் கரூர் அருகே பரபரப்பு

கரூர், ஜன. 3:  கரூர்  மாவட்டம் மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆறு ஓடுகிறது. மேலப்பாளையம் பகுதியில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் ஏற்றி செல்லும்  வகையில் குவாரி அமைக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக செயல்பட்டு வருகிறது.  கரூர், ராயனூர், காந்தி கிராமம், தாந்தோணிமலை, மேலப்பாளையம், வடக்குப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தினம்தோறும் இந்த பகுதி  குவாரிக்கு சென்று மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்து  வருகின்றனர். இதைதொடர்ந்து மேலப்பாளையம் வழியாக மாட்டு வண்டிகள் சென்று  வந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால்  மேலப்பாளையம் பகுதி சாலை பராமரிப்புக்காக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி  செல்பவர்கள் தினமும் ஒரு வண்டிக்கு ரூ.50யை இந்த கிராமத்துக்கு தர வேண்டுமென மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் பேசப்பட்டது. இதை பெரும்பாலானோர்  ஏற்று கொண்டதாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் இதை ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று  காலை 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள், மேலப்பாளையம் அமராவதி  ஆற்றில் மணல் அள்ள சென்றனர். அப்போது மேலப்பாளையம் கிராம பகுதியை சேர்ந்த  200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை பாதுகாப்பு நிதி  வழங்காத 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை வழிமறித்து நிறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பசுபதிபாளையம் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த பிரச்னை காரணமாக மேலப்பாளையம் பகுதியில் நேற்று ஒரு மணி  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : roads ,Karur ,
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...