×

நொகனூர் காட்டில் 70 யானைகள் முகாம் 3 குழுக்களாக பிரிந்து அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை, டிச.21:  தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டில் முகாமிட்டுள்ள யானைகள், 3 குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த இரண்டு மாதங்களாக பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படடன. இந்த யானைகள் தாவரகரை, மலசேனை, கெண்டிகானப்பள்ளி, ஒசட்டி, கேரட்டி, ரங்கசந்திரம், சாமநஞ்சபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதில் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் தோட்டங்கள், ராகி, துவரை, அவரை பயிர்கள் பெருத்த சேதமடைந்தன. தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்; சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியை முடுக்கி விட்டனர்.

ஆனால், 70 யானைகளும் மூன்று பிரிவுகளாக பிரிந்து மீண்டும் நொகனூர், மகரகட்டா. சீனிவாசபுரம், மாரசந்திரம், லக்கசந்திரம் ஆலல்லி, புதுக்கோட்டை, தின்னூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தன. பின்னர், நேற்று காலை நொகனூர் காட்டிற்குள் யானைகள் ஓட்டம் பிடித்தன. யானைகளின் அட்டகாசத்தால் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சித்தப்பா கவுடா என்பவரின் ராகி போர், மிளகாய் செடி, மல்லேஷ் மற்றும் ஈரப்பா ஆகியோரது ராகி போர், முட்டைக்கோஸ், மக்காச்சோளம் நாசமடைந்தது. மேலும், தின்னூர் கிராமத்தில் தேவராஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான ராகி, மக்காச்சோளம் தோட்டங்களையும் யானைகள் நாசம் செய்துள்ளன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை கண்டு கண்ணீர் வடித்தனர். பயிர் நாசத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : elephants camp ,forest ,groups ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...