×

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் ஒரே கிராமத்தை சேர்ந்த 20 பேர் ஜிஹெச்சில் அனுமதி கை,கால் மூட்டுகளில் வீக்கத்தால் அவதி

ராமநாதபுரம், டிச. 20: ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை செல்லும் சாலையில் பனைக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மகன், மகள் என 4 பேருக்கும், அதே தெருவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் காய்ச்சல் என ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை,கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். இக்காய்ச்சல் பற்றி அரசு மருத்துவமனையில் கேட்டபோது சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த இருளாயி கூறுகையில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று வருகிறோம். மேலும் ஊரில் கொசுத் தொலை அதிகமாக உள்ளதாகவும், உப்புநீரை நன்நீராக்கும் பிளாண்டிலிருந்து வரும் தண்ணீரை தான் குடிக்க பயன்படுத்தி வருகிறோம். அதிகமானவர்களுக்கு காய்ச்சல் பரவி வருவதால் பலரும் பீதியடைந்துள்ளனர். காய்ச்சலுக்கான காரணம் கொசுக்களா, குடிக்க பயன்படுத்தும் தண்ணீரா என்பது பற்றி மருத்துவ அதிகாரிகள் உடன் ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

துணை இயக்குனர் குமரகுருவிடம் கேட்டபோது, பனைக்குளம் கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட சிலர் காய்ச்சலால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.கடலாடி அருகே புத்தனேந்தல், பூலாங்குளம், உசிலனேரி, பி.கீரந்தை, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமங்களில் தெருக்களில் ஓடும் கழிவுநீர், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசிந்து சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பனி சீசன் துவங்கியுள்ளதால் சீதோசண நிலை மாறி மலேரியா, டைபாய்டு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது.மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர், முதுகுளத்தூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் குழந்தைகளுக்காக முன்னெச்சரிக்கையாக தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மேலும் முதுகுளத்தூர், சிக்கல், கடலாடி பகுதியில் வேகமாக பரவி மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...