×

தரமில்லாமல் வழங்கியதால் இரும்பு கடையில் குவிந்து கிடக்கும் விலையில்லா கிரைண்டர், பேன்கள்

ராமநாதபுரம், டிச.19: ராமநாதபுரத்தில் தமிழக அரசின் இலவச பேன்கள் பழுதடைந்து சரி செய்ய முடியாத நிலையில் பழைய இரும்பு கடையில் கிடக்கின்றன. தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர்களை வழங்கியது. இதில் ஏற்கனவே தங்கள் வீடுகளில் பேன், மிக்சி வைத்திருந்தாலும் அரசின் இலவசம் என்பதால் அனைவருமே இந்த இலவச பொருட்களை வாங்கியுள்ளனர். இந்நிலையில் வாங்கிய பொருட்கள் ஒரு மாதம் கூட உருப்படியாக ஓடியது கிடையாது. சில பொருட்கள் வாங்கும்போது உடைந்தும், ஆன் ஆப் சுவிட்சுகள் வேலை செய்யாமலும் உள்ளது.

இதை சரி செய்ய சென்றால் மெக்கானிக்குகள் இதை சரி செய்யவதற்கு பதிலாக புதிய எலக்ட்ரானிக் பொருட்களே வாங்கி விடலாம் என்கின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் ரூ.100, 200க்கு பழைய இரும்பு கடையில் இந்த பொருட்களை விற்று வருகின்றனர். ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் ஓடாத பேன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் வாகனம் மூலம் வந்து வீட்டில் ஓடாத அரசின் பொருட்கள் இருந்தால் எங்களிடம் தரலாம் என விளம்பரம் செய்தும் இந்த பொருட்களை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அரசு இலவசமாக கொடுத்தாலும் மக்களின் வரிப்பணம்தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொடுக்கும் இலவச பொருட்களை தரமுள்ள பொருளாக கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சின்னகடை தெரு லெட்சுமி கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவசமாக இந்த பொருட்களை வழங்கி உள்ளது. தரமில்லாத பொருட்களை வழங்குவதால் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இடத்தை அடைத்து வைக்காமல் கிடைக்கும் விலைக்கு விற்றுவிடுவோம் என்ற மனநிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். எங்களை போன்ற கூலி வேலை செய்யும் பொதுமக்களின் நலன் கருதி அரசு தரமுள்ள பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இலவச பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஒரு சிலர் இதை செய்தாலும் வியாபாரிகள் இதை வாங்ககூடாது. உடைந்த பொருட்களை சரி செய்ய சர்விஸ் சென்டர்கள் உள்ளது. அங்கு சென்று மக்கள் இதை சரி செய்து கொள்ளலாம் என்று கூறினர்.

Tags : pawns ,iron store ,
× RELATED சோழிங்கநல்லூர் ஐடிபிஐ வங்கியில் போலி...