×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பாலித்தீன் பயன்பாடு தாராளம் அதிகாரிகள் அதிரடி காட்டுவார்களா?

ஆர்.எஸ்.மங்கலம், டிச.19: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பாலித்தீன் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டு வரும் ஜனவரி முதல் அமல்படுத்த உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடாக கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பாலித்தீன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் டீக்கடை பேக்கரி ஹோட்டல் மற்றும் அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு முக்கிய நோக்கம் மழை பெய்யும் பொழுது மழைநீரை நிலத்தடிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளதோடு, சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக இல்லாமல் மாசுபடுகிறது என்பதற்காகவே பாலித்தீன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிராகவே பாலித்தீன் கவர்களில் டீ ,காபி மற்றும் ஹோட்டல்களில் சட்னி-சாம்பார் போன்றவற்றை சூடாக கட்டிக்கொடுத்து விடுகின்றனர். இதனால் பலருக்கும் உடல் உபாதை பாதிப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் இந்த தவறை கடைக்காரர்கள் செய்கின்றார்கள். பெரும்பாலான ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பாலித்தீன் கவர் மற்றும் கம்ப்யூட்டர் இல்லை என்று சொல்லக் கூடிய ரசாயனம் பூசப்பட்ட இலைகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது.

இதனை தடுக்க வேண்டிய சுகாதாரத்துறையும் உணவு பாதுகாப்பு துறையும் வேடிக்கை பார்க்காமல் உடன் தடை செய்வதற்கான துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பிளாஸ்டிக் பாலித்தீன் முற்றிலும் ஒழிக்க வேண்டிய ஒரு பொருள். இதனை பயன்படுத்துவதனால் ஏராளமான சுகாதார பிரச்னைகள் வருகின்றது. இதனை தயாரிக்கும் கம்பெனிகளை முதலாவதாக தடை செய்ய வேண்டும். அதேபோல் மொத்த விற்பனையாளர்களிடம் உள்ள பாலித்தீன் கவர்களையும் பறிமுதல் செய்து மீண்டும் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் வராமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருங்கால சந்ததியினரை காக்க உதவ வேண்டும் என்றார்.

Tags : RSS ,area ,RMMangalam ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...