×

பார்த்திபனூரில் பள்ளி அருகே கோழிக்கழிவுகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம், டிச.19: பார்த்திபனூரில் அரசு பள்ளிக்கு அருகே கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்கை பகுதியான பார்த்திபனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சமீப காலமாக பார்த்திபனூர் கோழி கடைகளில் வெட்டப்படும் பிராய்லர் கோழிகளின் கழிவுகள் பள்ளியின் மேற்குப்பகுதியில் உள்ள காம்பவுன்ட் சுவர் ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. அதன் அருகிலேயே பொது மயானமும் உள்ளது. தினந்தோறும் கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பகல் நேரங்களில் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியவில்லை. தற்போது அங்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோழி கழிவுகளினால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் கோழிக்கழிவுகளை கொட்ட மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சந்திரன் கூறுகையில், ஊராட்சியின் பல பகுதியில் போதிய இடமிருந்தும் வியாபாரிகள் பள்ளிக்கு அருகில் வந்த கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக பள்ளி வளாகத்தில் யாரும் நடமாட முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags : Parthipanur ,school ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...