×

பருவமழை காலங்களில் பனி பொழிவால் விவசாயிகள் கவலை

பரமக்குடி, டிச.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பனியால், பருவமழை பொய்த்து விடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும், மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருந்தாலும், சொல்லிக் கொள்ளும் படியாக மழை பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மட்டுமே கைகொடுத்து வந்துள்ளது. இந்தாண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த விவசாயிகள், மழை பொய்த்ததால் ஏமாற்றத்தை உணர்ந்து வருகின்றனர். அக்டோபர் மாதம் சராசரி மழை பெய்யாததால், மானாவாரி பயிர் சாகுபடியும், மகசூலும் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் மழை கைகொடுத்தால் மட்டுமே, மானாவாரி சாகுபடி தப்பித்து கொள்ள முடியும். கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் விவசாயம் இல்லாமல், விவசாயத்தை நம்பி கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க முடியாமல் உள்ளனர். விவசாயத்திற்கு முதல் இரண்டு வாரங்களில் 65 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் தற்போது 34 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. மானாவாரி பயிருக்கு 10 நாட்களுக்கு இடைவெளியில் மழை பெய்தால் மட்டுமே, மகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு தவிர்க்கப்படும். மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்திருந்தாலும், சராசரி மழை கிடைக்கவில்லை.
போதாக்குறைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால், இனியும் மழை பெய்யுமா என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழை காலங்களில் பனி பொழிந்தால், மழை குறைந்துவிடும். கடந்த சில நாட்களாக  கடும் குளிர் நிலவுகிறது. பருவம் தவறி மழை பெய்தாலும் நிலத்தடி நீராவது பெருகும். பருவம் தப்பினால் புயல் சின்னம் உருவாகி மட்டுமே மழை பெய்யும். பனி குறைந்து மழை பெய்யவேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறினார்.

Tags : monsoons ,
× RELATED வடகிழக்கு பருவமழை 58% கூடுதலாக பதிவான...