×

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் இடையூறு

ராமநாதபுரம், டிச.6: ராமநாதபுரம் நகர் பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களினால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் நகரில் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குறுகலாக உள்ளது. குறிப்பாக அரசு தலைமை மருத்துவமனை, ரோமன் சர்ஜ் மும்முனை சாலை, பழைய பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம் எதிர்புறம் மற்றும் பி.1 காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை குறுகிய உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினந்தோறும் சம்மந்தப்பட்ட இடங்களை ஆயிரக்கணக்கான டூவீலர்கள், வேன், கார், பஸ், லாரிகள் கடந்து செல்கின்றன. சமீபகாலமாக இச்சாலையில் இருபுறமும் சாலையோர கடைகளினால் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதுதவிர நகர் பகுதிக்குள் அளவுக்கு அதிகமாக தார்பாய் இல்லாமல் வைக்கோல் ஏற்றி செல்லும் லாரிகளினால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறையை மீறும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டூவிலர் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஓம்சக்தி நகரை சேர்ந்த குமார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை என பெயர் மட்டும்தான் உள்ளது. நகர்பகுதியில் பெரும்பாலான சாலைகள் பயன்படுத்த முடியாத அளவில் குறுகிய சாலையாக உள்ளது. இதுதவிர அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி செல்லும் லாரிகளினால் பின்னால் வரும் வாகனங்கள் அதனை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை