×

இடியுடன் மழை பெய்யும் போது மரங்களுக்கு கீழே ஆடுகளை அடைக்கக் கூடாது கால்நடைத்துறை அட்வைஸ்

ராமநாதபுரம், டிச. 4:  மழை, பனிகாலம் என்பதால் ஆடுகளை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது பருவநிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழையும், குளிரும் அதிகம் இருப்பதால் ஆடுகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. எனவே உரிய பராமரிப்பு முறைகளை கையாண்டால் ஆடுகளின் உற்பத்தித்திறன் குறையாமல் பார்த்து கொள்ளலாம் என்று கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் கூறியதாவது: ‘‘தற்போது வடகிழக்கு மழைகாலம் என்பதால் பச்சைப்புற்கள் அதிகளவில் கிடைக்கும். இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் அதிளவில் புல்லை சாப்பிடும். நீண்ட வறட்சிக்குப் பிறகு முளைத்த புற்கள் என்பதால் இதனை சாப்பிடும் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

எனவே மழை காலத்தில் அதிகாலை மேய்ச்சலுக்கு ஆடுகளை அனுப்பக் கூடாது. முற்பகலில் மேயவிடலாம். மழைகாலத்தை தொடர்ந்து வரும் பனிக்காலத்திலும் மாலையில் ஆடுகள் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். காலை 9 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மேயவிட வேண்டும். ஆட்டுக்கொட்டில்களைச் சுற்றி மழைநீர் தேங்கவிடக் கூடாது. அவ்வாறு நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மற்றும் ஒட்டுண்ணிகள் பெருகி ஆடுகளின் உடல்நலத்தை பாதிக்கும். தொடர்ச்சியாக மழை பொழியும் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாது. அந்த நேரங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்படாதவாறு அடர் தீவனங்களை சற்று கூடுதலாக தருவது நல்லது.

புதுமழையில் புற்கள் துளிர்த்து பசுமையுடன் காணப்படும். இந்த இளம்புற்களை மேயும் ஆடுகள் போடும் சாணம் இளக்கமாக இருக்கும். இதனை கழிச்சல் என்று தவறுதலாக நினைக்க கூடாது. காய்ந்த தட்டைகளை தீவனத்தில் சேர்த்து கொடுத்தால் ஆடுகள் இயல்பான நிலையில் சாணம் போகும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களுக்குக் கீழே ஆடுகளை அடைக்கக் கூடாது. பனை மற்றும் தென்னை மரங்களுக்கு அடியில் ஆடுகள் செல்வது மேலும் ஆபத்தை அதிகரிக்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மொபைல் டவர், உயர்அழுத்த கோபுரங்கள், மின்கம்பிகள் செல்லும் வழிகளின் கீழே ஆடுகளை மேயவிடக் கூடாது. இயற்கை இடர்பாடுகளினால் மாடுகள் இறந்தால் உடன் சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உரிய இறப்பு சான்றிதழ் பெற்றால்தான் உரிய நிவாரணம் கிடைக்கும்’’ என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை