×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் குண்டும் குழியுமான சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், நவ.30:  ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறி வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் முக்கியமான வழித்தடமாகும். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், உத்திரகோசமங்கை, தேவிபட்டிணம், சேதுக்கரை போன்ற பகுதிகளுக்கு வருகின்றனர். பெரும்பாலான பக்தர்களும் பொதுமக்களும் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சி.கே.மங்கலம் கைகாட்டி, கற்காத்தகுடி, சனவேலி, இந்திரா நகர், மங்களம், வடவயல் சோழந்தூர் தேவிபட்டிணம் போன்ற பகுதிகள் வழியாக செல்கின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலை கைகாட்டி. சனவேலி. சவேரியார்பட்டிணம். இந்திரா நகர் பகுதிகளில் ரோடு குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

தற்போது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் இவ்வழியாக செல்லும் கார், வேன், டூவீலர் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் குண்டும் குழியுமாக இருப்பது தெரியாமல் சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்னர். சாலை விரிவாக்க பணி வேறு ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டி ராஜா கூறுகையில், இந்த ரோடு போக்குவரத்து நிறைந்தது. ஆனால் அதற்கு தகுந்த ரோடாக இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ரோடு விரிவாக்கம் செய்கின்றோம் என கூறி ஆப்பிராய் போன்ற சில இடங்களில் பல மாதங்களாக குழி தோண்டப்பட்டவாறே கிடப்பில் உள்ளது. மற்ற இடங்களில் குண்டும் குழியுமாக பல்லாங்குழியாகி வருகின்றது. இதனால் வாகனம் ஓட்ட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை உடனே சீர் செய்து தர வேண்டும் என்றார்.

Tags : area ,RMMangalam ,road accident ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...