×

கிராம பகுதியில் புதர்மண்டிய மயானம்

ராமநாதபுரம், நவ.29: ராமநாதபுரம் யூனியன் கிராம பகுதியில் உள்ள மயானங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் உள்ள மயானங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படுவது கிடையாது. இதனால் மயானங்கள் செல்லும் வழிகள் அனைத்தும் செடி கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. பல ஊராட்சிகளில் உள்ள மயானங்கள் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறி வருகிறது. சில இடங்கள் மழைநீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஈமகாரியங்களுக்காக மயானம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மரங்கள் அடர்த்தியாக உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. அரசு திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மயானங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். திருப்புல்லாணி அருகே வள்ளிமாடன்வலசை கிராமத்தில் உள்ள மயானம் பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகிறது.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பிரகாசம் கூறுகையில், கிராமத்தில் உள்ள மயானத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் மயானத்திற்கு பிரேதத்துடன் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல் ஈமகாரியங்கள் செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. அரசு பல்வேறு திட்டங்களில் நிதி உதவி அளித்து ஊராட்சிகளில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  குதக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகளிடம் கேட்டபோது, அனைத்து ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் இதுதொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். பராமரிப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : burial site ,area ,
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...