×

விஏஓ.க்கள் பற்றாக்குறையால் சான்று வழங்க தாமதம் பயிர்காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் முதுகுளத்தூர், கடலாடி விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, நவ.20: முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் வி.ஏ.ஓக்கள் பற்றாக்குறையால் பயிர்காப்பீடு செய்ய சான்றுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர், கடலாடி தாலுகா பகுதி கிராமங்களில் மானாவாரி எனப்படும் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதில் நெல் முக்கிய பயிராக உள்ளது. மிளகாய், கம்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்டவையும் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டனர். பயிர் முளையிட்டு வளர்ந்த நிலையில் போதிய மழையின்றி, கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வளர்ந்த பயிர்கள் கருகி வருகின்றன.இந்நிலையில் விவசாயிகள் பாரத பிரதமர் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலாடி தாலுகாவிலுள்ள  மீனங்குடி, ஆப்பனூர், மாரியூர், கடுகுசந்தை, மூக்கையூர், ஓரிவயல், ஆ.புனவாசல், வேப்பங்குளம், மேலச்செல்வனூர், சிறைக்குளம், கொக்கரசன்கோட்டை உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களுக்கு வி.ஏ.ஓக்கள் இல்லை. இது போன்று முதுகுளத்தூர் தாலுகாவில் கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, புல்வாய்குளம், சாத்தனூர், சித்திரங்குடி உள்ளிட்ட 11 வருவாய் கிராமங்களுக்கு வி.ஏ.ஓக்கள் இல்லை. இதனால் இரு தாலுகாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய தேவையான பட்டா10(1), சிட்டா, அடங்கல் போன்ற சான்றுகள் பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால அவகாசத்தை நீட்டிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘கடன் வாங்கி செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள், வறட்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன. இதனால் பயிர்காப்பீடு செய்யலாம் என நினைத்தால், வி.ஏ.ஓக்கள் இன்றி தேவையான சான்றுகள் கிடைக்கவில்லை.  பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய குளோபல் பொசிசன் சிஸ்டம் என்ற புதிய முறையில் அரசு துறை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைவதற்குள், பயிர்காப்பீடு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வருவாய்துறை இணைய தளம் சரியாக இயங்குவது கிடையாது. வருவாய்துறையினர் விவசாயம் செய்த அனைவரின் நிலங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து, அடங்கல் சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இம்மாதம் 30ம் தேதி கடைசி தேதியாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் அடங்கல் சான்று பெறவில்லை. வங்கிகளிலும் நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பிரீமியம் தொகை வாங்கப்படுவதால் விவசாயிகள் பல துயரங்களை சந்தித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர். வருவாய்துறையினர் கூறும்போது, ‘‘வி.ஏ.ஓக்கள் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்பு வகித்த கிராம கணக்குகளை அந்தந்த தாசில்தாரிடம் ஒப்படைத்து விட்டனர். இதனால் பற்றாக்குறை நிலவுகிறது. கலெக்டரின் உத்தரவின்பேரில் பயிர்காப்பீடு செய்ய தேவையான சான்றுகளை வருவாய் ஆய்வாளர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : delivery ,
× RELATED புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்