×

தாந்தோணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு

கரூர், நவ. 15: தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி மருதம்பட்டி, மணவாடி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன்  வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அந்த பகுதியில் உள்ள வீட்டில் உள்ள நீர் சேமிப்பு தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதை கண்டறிந்து அந்த வீட்டின் குழந்தைகளை அழைத்து தொட்டியின் மீது  ஏற்றி, கொசு புழுக்கள் உள்ளதை சுட்டிக் காட்டி இதுபோன்ற கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு நோய் பரவுகிறது. எனவே, உங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் இதை மாணவர்களாகிய நீங்கள் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சேமித்து வைத்திருக்கும் நீரை நன்றாக துணிகள் மற்றும் மூடிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாகி அது நமக்கு நோயை உருவாக்குவதுடன் அண்டை அயலாருக்கும் நோயை பரப்புகிறது.

டெங்கு தடுப்பு பணியாளர்கள் அல்லது தூய்மை காவலர்கள் வீடு வீடாக சென்று ஏடிஎஸ் கொசு புழுக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் டெங்கு கொசுவை எளிதில் ஒழித்து விடலாம் என கலெக்டர் தெரிவித்தார். மணவாடி கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் தண்ணீர் முறையாக பராமரிக்காமல் லார்வா உற்பத்தியாகும் வகையில் இருந்தால் அங்குள்ள பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 18ம்தேதி அன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  குறும்படமும், சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் நிர்மல்சன், மருத்துவர்கள் ஆனந்தகுமார், கார்த்திக்கேயன் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : area area ,Dandonti ,home ,
× RELATED எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்