×

பக்தர்கள் முகம்சுளிப்பு மழைகால நோய்கள் பரவும் நிலையில் லாரிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகாரிகள் கவனிப்பார்களா?

ராமநாதபுரம், நவ.8:  ராமநாதபுரம் நகர் பகுதியில் தண்ணீர் லாரிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நோய்கள் பரவும் நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தடுக்க அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. தற்போது காவிரி நீர்வரத்து குறைவால் ராமநாதபுரம் நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் வருவது கிடையாது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் பலர் தண்ணீர் லாரிகள், மினரல் வாட்டர், பாக்கெட் குடிநீரையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போதைய நிலையில் குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் கலாச்சாரம் தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தமிழக அரசும் பாட்டில்களில் அடைத்து குடிநீரை விற்று வருவது குறிப்பிடத்தக்கது. பாட்டில்கள், கேன்கள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் குடிநீர் ஐஎஸ்ஐ முத்திரையுடன் விற்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இருப்பினும் ராமநாதபுரம் நகர் பகுதியில் பலர் இந்த சட்டத்தை பின்பற்றுவது கிடையாது.
ராமநாதபுரம் நகர் பகுதிக்கு உச்சிப்புளி, பனைக்குளம் போன்ற கிராம பகுதிகளில் இருந்து லாரிகளில் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடம் ரூ.10 வரை என சப்ளை செய்யப்படுகிறது. இதனால் நகர் பகுதியில் குடிநீர் தேவை ஓரளவிற்கு தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது.
இருப்பினும் இந்த லாரிகளில் உள்ள டேங்கர்கள் பல நாட்கள் சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவி வருகிறது. இதுதவிர பெட்டிக் கடைகளில் வாங்கப்படும் பாக்கெட் குடிநீரில் பிளாஸ்டிக் வாடை அடிக்கிறது. கேன், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் மினரல் வாட்டரில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் வாடை அடிக்கிறது.
குடிநீரின் தேவை அதிகமாக உள்ளதால் காதாரமற்ற குடிநீர், தண்ணீர் லாரி மற்றும் பிளாஸ்டிக் கேன்களில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது லாரி, கடைகளில் ஆய்வு செய்து லாரிகளில் டேங்கர்களை சுத்தம் செய்யவும், தரம் இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள், மினரல் வாட்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : drinking water suppliers ,devotees ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்