×

ஆங்காங்கே குப்பைகள் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேட்டில் மக்கள் சிக்கி தவிப்பு அலட்சியத்தில் அதிகாரிகள்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.25: திருப்பாலைக்குடியில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் நிலை உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யாததால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் ஊராட்சிகளின் அனைத்து பணிகளையும் அந்தந்த யூனியன் பி.டி.ஓக்களின் மேற்பார்வையில் ஊராட்சி செயலாளர்கள் சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் உள்ள செயலாளர் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான குடிநீர் வழங்குதல், சுகாதாரத்தை பேணி காக்கும் விதமாக ஊரில் சேரக்கூடிய குப்பைகளை குவிய விடாமல் அன்றாடம் துப்புறவு பணியாளர்களை கொண்டு அகற்றுதல், கழிவுநீர் கால்வாயை தூர்வாருதல் போன்ற எந்தப் பணியையும் சரியாக செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் ஊரின் பல பகுதிகளிலும் குப்பை, பாலித்தீன் குவியலாகவே உள்ளதால், பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை காலம் என்பதால், தொற்று நோய்கள் பரவும் அபாயமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மழை காலங்களில் இந்த ஊராட்சியில் சரியான முறையில் துப்புறவு பணிகள் மேற்கொள்ள வில்லை. இதனால் ஏராளமானோர் மர்ம காய்ச்சலுக்கு பாதிப்பாகி அவதிப்பட்டனர்.

பாலித்தீனை முழுமையாக ஒழிக்க வேண்டும், சுகாதாரமான மாவட்டமாக ராமநாதபுரம் திகழ வேண்டும் என்று முனைப்புடன் கலெக்டர் செயல்படுகிறார். ஆனால் அவரின் எண்ணத்திற்கு மாறாக திருப்பாலைக்குடி ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறது என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. ஊராட்சி செயலாளர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் உள்ளது. இது சம்மந்தமாக பொதுமக்கள் சார்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் முறையாக வழங்குவதில்லை. துப்புறவு பணிகளை சரியாக செய்து கொடுப்பதில்லை. மழை காலம் துவங்கிய நிலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊர் பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை