×

சேலத்தில் தொடர் வழிப்பறி சம்பவம் கும்பலை தப்ப விட்ட 2 ஏட்டு இடமாற்றம்

சேலம், அக்.10: பெங்களூருவை சேர்ந்தவர் அலி (48). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, டால்மியா போர்டு அருகே வழிமறித்த 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், அவரிடம் இருந்து பணம், வாட்ச், ஏடிஎம் கார்டு உள்பட ரூ1.50 லட்சம் மதிப்பு பொருட்களை பறித்து சென்றது. அதே கும்பல் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லகண்ணு உள்பட 6 பேரிடம் வழிப்பறி செய்து தப்பி சென்றது. சேலம் சூரமங்கலம் எல்லைக்குள் 4 பேரிடமும், சேலம் மாவட்டத்தில் 3 பேரிடமும் இந்த வழிப்பறி சம்பவம் நடைபெற்றது. இதனால் மாநகர போலீசாரும், மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வழிப்பறி ஆசாமிகள் தங்களிடம் இருந்து பொருட்களை பறித்து தப்பியபோது, அங்கிருந்த ரோந்து போலீசாரிடம் தாங்கள் சென்று கூறியதாகவும், ஆனால் அவர்கள் கருப்பூர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகர கமிஷனர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.‘‘பொதுமக்கள் தங்களை எளிதில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், 24 மணி நேரமும் ஒளி உமிழும் விளக்குடன் கூடிய ரோந்து வாகனம் தயார் செய்து கொடுத்திருக்கிறேன்’ என கூறிய அவர், அந்த காவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதன்படி போலீஸ் ஏட்டுகள் முத்துசாமி கருப்பூர் ஸ்டேஷனுக்கும், சிவலிங்கம் வீராணம் ஸ்டேஷனுக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில் தொடர் வழிப்பறி ஆசாமிகளை பிடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் 20க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : pilgrims ,Salem ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...