×

பயிர்களை பாதுகாக்க களைகொல்லி மருந்து தெளியுங்கள் வேளாண் இணை இயக்குனர் தகவல்

ராமநாதபுரம், அக்.10:  ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய பணிகள் வடகிழக்கு பருவ மழையை நம்பியே நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற மழையினை பயன்படுத்தி முன் பருவ விதைப்பாக 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விதைப்பு பணி நடைபெற்றுள்ளது. கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருவதினால் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  
இதன் முதற்கட்டமாக விவசாயிகள் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். களைக்கொல்லி மருந்துகளை வேளாண்மை துறையிலுள்ள அலுவலர்களின் ஆலோசனையின்படி தெளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கைக்களையாக எடுப்பதாக இருந்தால் பயிர் முளைத்த 15வது நாள் ஒரு முறையும், 30வது நாள் ஒரு முறையும் ஆள் வைத்து வேண்டும்.

நெல் வயலில் களை முளைத்த பின்பு  பயிரில் 5-7 இலைகள் இருக்கும்போது வயலில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த பிஸ்பைரிபேக் சோடியம் என்ற களைக்கொல்லி மருந்தினை எக்டேருக்கு 200 மி.லி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். தற்சமயம் விவசாயிகள் அதிகளவில் புதிய மூலக்கூறு கொண்ட களைக்கொல்லியினை பயன்படுத்தி வருவதனால் களைக்கொல்லியின் முழு பயனை அடைந்திட விவசாயிகள் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

களைக்கொல்லி மருந்தினை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். களைக் கொல்லி மருந்தினை தெளிக்கும் போது பிரத்யேக நாசில் (விசிறி தெளிப்பான்) கொண்டு தெளிக்க வேண்டும். இதனால் வயலில் மருந்து சீராக பரவி களையை கட்டுப்படுத்த ஏதுவாகிறது. களைக்கொல்லி தெளிக்கும் போது வயலில் தண்ணீர் தேங்கி இருக்கக் கூடாது. வயல் ஈரம், மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். களைக்கொல்லி மருந்து அடித்து குறைந்தது 6 மணி நேரத்திற்கு மழை இருக்க கூடாது. அதற்கேற்றவாறு வானிலையை கண்காணித்து தெளிக்க வேண்டும். களைக் கொல்லி தெளித்த வயல்களில் நடக்கக்கூடாது என வேளாண்மை இணை இயக்குநர் சொர்ணமாணிக்கம் தெரிவித்தார்.

Tags : coordinator ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை