×

சுவாசத் தொற்று பாதிப்பு போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம்:  சுவாசத் தொற்று பாதிப்பு காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பொதுமக்களை சந்திக்க வந்த போப் அவருடைய தனிப்பட்ட வாகனத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகவும் சோர்வாக, களைப்புடன் காணப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மூச்சிறைப்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக ரோம் நகரில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனுமதிக்கப்பட்ட முதல் நாளான நேற்று அவர் எவ்வித சுவாச பிரச்னையும் இல்லாமல் நன்றாக தூங்கினார். இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார், என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  வரும் வாரம் நடைபெறும் குருத்து ஞாயிறு மற்றும் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.




Tags : Pope ,Francis Hospital , Admission to Pope Francis Hospital for respiratory infection
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...