நூக்: நேட்டோ அமைப்பில் உள்ள டென்மார்க்கின் ஒரு பகுதியாக தன்னாட்சி பெற்ற பிரதேசமாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கிக் கொள்ள அதிபர் டிரம்ப் விரும்புகிறார். இதற்கு டென்மார்க்கும், கிரீன்லாந்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று வாஷிங்டனில் டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவு அமைச்சக சகா விவியன் மோட்ஸ்பெல்ட் ஆகியோரை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு முன்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘அமெரிக்காவுக்கு தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக கிரீன்லாந்து தேவை. அதை நாம் பெறுவதற்கு நேட்டோ அமைப்பு உதவ வேண்டும் ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
