கோவை: திருநங்கை போலீஸ் திடீரென ராஜினாமா செய்து, கமிஷனரிடம் கடிதத்தை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் நஸ்ரியா (25). திருநங்கையான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து, ‘‘கோவை போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகிறேன். உயர் அதிகாரிகள் என்னை பணி செய்யவிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
நான் சார்ந்த பிரிவில் எனக்கு அதிகாரியாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர், ஒரு ஆண் டிஎஸ்பி மற்றும் ஒரு ரைட்டர் என்னை தொந்தரவாக நடத்தினர். இன்ஸ்பெக்டரின் தொல்லை காரணமாக கடந்த ஜனவரி மாதம் நான் 18 தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தேன். அதற்கு பிறகும் என் மீதான தொந்தரவு தொடர்ந்தது. கண்ணியமில்லாத இந்த துறையில் வேலை செய்ய விரும்பவில்லை. டிஜிபி அலுவலகத்திற்கும் இருமுறை புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக நான் இந்த வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்.
எனக்கு வழங்கப்பட்ட சீருடையை போலீஸ் ஸ்டோர் பிரிவில் ஒப்படைத்து விட்டேன்’’ என்றார். மேலும் ராஜினாமா கடிதத்தை அவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார். கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,``நஸ்ரியாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய புகார் தொடர்பாக வடக்கு பகுதி துணை கமிஷனர் சந்தீஷ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்பது ெதாடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றார்.