கோவில்பட்டி : மேலக்கரந்தை காற்றாலை கம்பம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் வலியுறுத்தி உள்ளார்.தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் வட்டாரத்தில் மேலக்கரந்தை அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கடந்த 2019ம் ஆண்டு காற்றாலை மின்கம்பம் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க சுமார் ₹300 கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
காற்றாலையின் இறக்கைகள் குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து கனரக வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு இங்கு இறக்கி வைக்கப்படுகிறது. காற்றாலை கம்பம் மற்றும் உதிரி பாகங்கள் இங்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலையின் பாகங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பின்னர் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தை சேர்ந்த சுமார் 13 கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது உற்பத்தியை செய்துவரும் ஆலை நிர்வாகம் வெளிமாநில, வெளிமாவட்ட இளைஞர்கள் மூலம் பணி செய்து வருகிறது. மருந்துக்கு கூட இப்பகுதி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு பறிபோய் உள்ளது. இவை தவிர நிர்வாகம் தனது தொழில் ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது.
இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு ஆலை நிர்வாகத்திடம் அணுகினால் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கிறது. எட்டயபுரம் வட்டம், புதூர் வட்டாரம் முத்துலாபுரம் குறுவட்டங்களில் உள்ள மேலக்கரந்தை, மாசார்பட்டி, மாவில்பட்டி, வெம்பூர், அழகாபுரி, அயன்வடமலாபுரம், முத்துலாபுரம் கீழக்கரந்தை, தாப்பாத்தி, வவ்வால் தொத்தி, சக்கிலிபட்டி, நம்பிபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எவ்வித தொழில் வளர்ச்சி இல்லாத பகுதி என்பதால் புதிய தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் சலுகைகளை.
பெற்றுக் கொண்டு இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் வஞ்சிப்பது வேதனையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு மேலக்கரந்தை சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் வலியுறுத்தி உள்ளார்.