×

சிலிக்கான் வேலி வங்கி மூடலால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு: நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்: சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கி இழுத்து  மூடப்படுவதாக கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது.  இந்த வங்கியின் மொத்த நிர்வாகத்தையும் அமெரிக்காவின் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்  கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியான சிலிக்கான் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17.13 லட்சம் கோடி.  வங்கியின் டெபாசிட் தொகை ரூ.14.37 லட்சம் கோடி ஆகும். இந்நிலையில்,இந்திய வம்சாவளியை சேர்ந்த   சிலிக்கான் வேலி வென்சர் முதலீட்டாளரான  அசு கர்க் கூறுகையில்,‘‘ சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு  பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் தொழில் செய்யும் பெரும்பாலான  இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த வங்கியை தான் பயன்படுத்துகின்றன.

இந்த வங்கி மூடப்பட்டதால் இனி இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பிரச்னைதான்’’ என்றார். இதுபற்றி நிபுணர்கள்  தெரிவிக்கையில்,‘‘ சிலிக்கான் வேலியில் மூன்றில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இந்திய வம்சா வளியினர் தொடங்கியுள்ளனர்.
இதனால்  அடுத்த வார செலவுக்கான தொகை வழங்குதல், ஊழியர்களுக்கு சம்பளம்  வழங்குவது போன்றவற்றில் சிக்கல் உருவாகும். அதே போல்  அமெரிக்காவில் அலுவலகமோ, ஊழியர்களோ இல்லாத இந்தியாவின் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலிக்கான் வங்கியில் கணக்கு வைத்துள்ளன. வங்கியின் வீழ்ச்சியால் இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : Silicon Valley , Silicon Valley bank closures impact on Indian startups: Experts say
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!