பீஜிங்: இந்தியா ஆட்சேபனை தெரிவித்த நிலையில், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு மீது தங்களுக்கு முழு உரிமை உள்ளதாக சீனா மீண்டும் கூறி உள்ளது. லடாக்கின் வடக்கே சியாச்சின் பனிப்பாறைக்கு அப்பால் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இப்பகுதியை கடந்த 1963ம் ஆண்டு பாகிஸ்தான் சீனாவுக்கு எழுதி கொடுத்தது. இப்பகுதியில் சீனா-பாகிஸ்தான் கூட்டு ஒத்துழைப்பில் பொருளாதார வழித்தட பாதைக்கான கட்டமைப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘‘ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியப் பகுதி. 1963ல் கையெழுத்திடப்பட்ட சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது, செல்லாதது என்ற நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
பாகிஸ்தானின் பலவந்தமான சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பகுதி வழியாக செல்லும் பொருளாதார வழித்தடத்தையும் நாங்கள் அங்கீரிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதி. இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளிடம் பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கு நேற்று பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், ‘‘ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்தின் ஒருபகுதி. சீனாவின் சொந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் எதிர்க்க முடியாதவை. 1960களில் இருந்தே சீனாவும் பாகிஸ்தானும் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை தீர்மானித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தை ஐநா சாசனம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.
