நியூயார்க்: இந்தியா -பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 80வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். விரைவில் அவர் 100வது முறையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாள் போரை வர்த்தகத்தை வைத்து மிரட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த விஷயத்தில் மூன்றாம் தரப்பு தலையிடவில்லை என இந்தியா மறுத்தாலும், டிரம்ப் கவலைப்படவில்லை.
இதைப் பற்றி சமீபத்தில் டிரம்ப் பேசுவதை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.அதிலும் அவற்றில் பல கடினமான போர்கள். சில 30 ஆண்டுக்கும் மேலாக நீடித்தவை. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியிருந்தது.
அது அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்குள் நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். இது போல யாருமே 8 போரை நிறுத்தியதில்லை. எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தராதது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் எதுவுமே செய்யாத முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ல் அமைதிக்கான நோபல் பரிசு தந்தார்கள். எதற்காக அந்த விருதை தந்தார்கள் என்ற கேள்விக்கு ஒபாமாவால் பதிலே சொல்ல முடியவில்லை.
அவர் சிறிது காலம் அமெரிக்க அதிபராக இருந்ததை தவிர, வேறெதும் செய்யவில்லை. எதுவுமே செய்யாதவருக்கு நோபல், 8 போர்களை நிறுத்திய எனக்கு இல்லை’’ என வேதனை தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் டிரம்ப் 3வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி பேசி உள்ளார். கடந்த 8 மாதத்தில் 80வது முறையாக அவர் கூறியிருக்கிறார். எனவே விரைவில் இந்த விஷயத்தில் டிரம்ப் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* வெனிசுலா செயல் அதிபர் டிரம்ப்பா?
வெனிசுலா அதிபர் மதுரோ, அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டின் தற்காலிக அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும் வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் நேற்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.
அதில் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படமும் ‘வெனிசுலாவின் செயல் அதிபர், பதவிக்காலம் ஜனவரி 2026’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக டிரம்ப், ‘‘பாதுகாப்பான, முறையான, விவேகமான ஆட்சி மாற்றத்தை நம்மால் செய்ய முடியும் வரை, அமெரிக்கா வெனிசுலாவை ஆட்சி செய்யும். வேறு யாராவது வெனிசுலாவை கைப்பற்றுவதற்கு நாம் இடமளிக்க முடியாது’’ என கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
