சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான அறுவடை நாள் எனப்படும் பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிங்கப்பூரிலும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் 1,500க்கும் மேற்பட்ட புலம்பெயர் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்கள், பல்வேறு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவையொட்டி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிங்கப்பூர் கலைஞர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியர்கள் இணைந்து நடத்திய பாரம்பரிய இசை, நடனம், யோகா உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், பொங்கல் பண்டிகையின் மரபுகள், ஜவுளி பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவிய கண்காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
