×

சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சொந்தமான அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜ பிரமுகர்: அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

வில்லியனூர்: புதுவை அருகே உள்ள வில்லியனூர் கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கடந்த 2008ம் ஆண்டு பல ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அந்த இடத்தில் எந்தவொரு தொழிற்சாலையும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், கரசூர் மெயின் ரோடு அங்காள பரமேஸ்வரி கோயில் அருகே அரசு கையகப்படுத்திய இடத்தில் பாஜக கேந்திர பொறுப்பாளர் செல்வராஜ் என்பவர் 1500 சதுர அடியில் புதிதாக வீடு கட்டி முடித்திருந்தார். அந்த வீட்டை இடிப்பதற்கு நேற்று வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், மின் துறை ஊழியர்கள் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்தனர்.

வீட்டை இடிக்க பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள் செல்வராசு வீட்டிற்கு சென்ற மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வராசு மற்றும் அவரது குடும்பத்தினர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செல்வராசுவின் தாயார், பொக்லைன் இயந்திரத்தில் ஏறி வீட்டை இடிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அதிகாரிகளிடம் செல்வராசு பேசும்போது, புதுவை அரசு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக நிலங்களை கையகப்படுத்திய போது 9 ஏக்கர் நிலங்களை வழங்கினோம். இதுவரை இங்கு எந்த சிறப்பு பொருளாதார மண்டலமும் வரவில்லை.

இந்த இடத்தை நாங்கள் வழங்கியதற்காக அரசு 2008ல் கொடுத்த தொகையையும் நான் வாங்கவில்லை. எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. எனவே வீட்டை கட்டினேன். திடீரென இடிக்க வந்துள்ளீர்கள். கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்றார். அதற்கு தாசில்தார், சப்-கலெக்டரின் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்துவிட்டு வீட்டை அகற்றாமல் திரும்பினர். இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில், ‘கடந்தாண்டு வீடு கட்டும் போதே எச்சரித்தோம். அரசு ஒரு இடத்தை வாங்கிய பிறகு அதில் தனியார் வீடு கட்டுவது ஆக்கிரமிப்பாகும்.

சப்-கலெக்டர் அலுவலகம் மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் செல்வராசு பதிலளிக்கவில்லை. இவருக்கு சேரவேண்டி பணம் கோர்ட்டில் உள்ளது. அங்கு வாங்கி கொள்ளலாம். தற்போது கலெக்டர், சப்-கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் வீட்டை இடிக்க வந்துள்ளோம். எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்’ என்றார்.

Tags : BJP , A BJP leader who built a house occupying a government land belonging to a special economic zone: Argument with the officials who came to remove it caused a commotion.
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...