×

சீன ராணுவத்துக்கான நிதி 7.2 சதவீதம் உயர்வு

பீஜிங்: 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ராணுவத்துக்கான நிதியை 7.2 சதவீதம் கூடுதலாக ஒதுக்கி சீன அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் மிகபெரிய ராணுவ பலம் கொண்ட நாடாகவும், ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாகவும் சீனா உள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய விமானப் படையையும், கப்பல் படையையும் வைத்துள்ள சீனா அண்மையில், 3வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அறிமுகம் செய்தது.  பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் ராணுவத்துக்கான நிதியை சீன அரசு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டம் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் நடைபெற்றது. அதில் தாக்கல் செய்யப்பட்ட 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ராணுவத்துக்கான நிதி 7.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராணுவத்துக்கான நிதி இந்திய மதிப்பில் ரூ.18.36 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 8வது ஆண்டாக சீன அரசு ராணுவத்துக்கான நிதியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : 7.2 percent increase in funding for Chinese military
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!