கம்மாபுரம்: ‘தமிழ்நாட்டுக்கு என்எல்சி தேவையில்லை. ராணுவத்தை அழைத்து வந்தாலும் ஒரு பிடி மண்ணை கூட என்எல்சி எடுக்க முடியாது’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் இரண்டு விரிவாக்க பணிகளுக்காக கத்தாழை கரிவட்டி, மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி உள்ளிட்ட 40 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தவுள்ளது. இதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி 2வது நாளாக நேற்றும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘முப்போகம் விளையக்கூடிய ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டித்தரும், இந்த மண்ணை எப்படியாவது கைப்பற்ற என்எல்சி நிர்வாகம் முயற்சி செய்கிறது.
என்எல்சி நிறுவனத்தை வரும் 2025ல் தனியாரிடம் ஒப்படைக்க போகின்றனர். நான் சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. தனியாரிடம் ஒப்படைக்க உள்ள நிலையில் எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இப்போது கையகப்படுத்துகிறார்கள். வளம் கொழிக்கும் மண்ணை கம்பெனியிடம் கொடுப்பதற்காகவா? நிலங்களை கையகப்படுத்த ராணுவத்தை கூப்பிட்டு வந்தாலும் கூட ஒரு பிடி மண்ணை கூட நாங்கள் கொடுக்க மாட்டோம்.
அண்ணூரில் அரசு நிலம் எடுப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக எடப்பாடி பழனிசாமி, வேலுமணி போராட்டம் செய்கின்றனர். ஆனால் இதை கண்டித்து போராடவில்லை. என்எல்சி நிறுவனம் இங்கு, சம்பாதித்து தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை’ என்று தெரிவித்தார்.
