×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க லாக்கர் அறை திறப்பு: பெருந்திட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு'

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து கோயிலின் தங்கதேரின் பராமரிப்பு பணியை தொடங்கி  வைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை கோயிலுக்கு அழைத்து வர 4 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் இக்கோயிலில் திருவிழா களைகட்டும். சிறப்பு வாய்ந்த இக்கோயிலை மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேம்பாட்டு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரூ.200 கோடியில் கோயில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதோடு கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக்கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அமைச்சர் சேகர்பாபு அங்கிருந்து காரில் திருச்செந்தூருக்கு வந்தார். கோயிலில் சரவணப்பொய்கை யானை குளியல் தொட்டி கட்டும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலின் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தங்கதேரின் பராமரிப்பு பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை திருக்கோயிலுக்கு அழைத்து வர 4 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் திருக்கோயில் அன்னதான கூடத்தினை பார்வையிட்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறி, அர்களுடன் அன்னதான உணவருந்தினார். திருக்கோயில் வளாகத்தில் ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட பக்தர்களின் செல்போன் பாதுகாக்கும் லாக்கர் அறையை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் திருக்கோயிலில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பக்தர்கள் அதிகமாக வருகை தரும் திருக்கோயில்களுக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தொலைநோக்கு பார்வையுடன் செய்திட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் முதல் கட்டமாக 10 திருக்கோயில்களில் பெருந்திட்ட வசதிகள் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பணிகளை முதலமைச்சர் 28.09.2022 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் மூலம் ரூ.100 கோடி மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி நன்கொடை அளித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொட்டி, துணை மின்சார நிலையம், நிர்வாக அலுவலகம் போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய 80,000 சதுர அடிக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகளை தொடங்க உள்ளோம். குறிப்பிட்ட 2 ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவேற்றப்படும். பக்தர்கள் தங்கும் விடுதி அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  பிப்ரவரி 3ம் தேதி சன்னதியை சுற்றி ரூ.16 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் தாமாகவே விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்’ என்றார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், அறங்காவலர் கணேசன், ஆர்டிஓ புஹாரி, திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக், டிஎஸ்பி ஆவுடையப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், கமிஷனர் வேலவன், நகர திமுக செயலாளர் வாள்சுடலை, ஒன்றிய திமுக செயலாளர்கள் பார்த்தீபன், நவீன்குமார், மானேஜர் சிவநாதன், மண்டல துணை ஆணையர் வெங்கடேஷ், கோயில் சேர்மனின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், கோயில் செயற்பொறியாளர் அழகர்சாமி, இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், ஆர்ஐ அமிர்தகண்ணன், விஏஓ அமிர்தலிங்கம், கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchendur Subramania Swamy Temple ,Minister ,Shekharbabu , Opening of locker room to protect cellphones of devotees in Tiruchendur Subramania Swamy Temple: Minister Shekharbabu inspects the work done.
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...