- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பொங்கல் திருவிழா
- சென்னை
- பொங்கல்
- திமுக
- தமிழர் பண்டிகையான பொங்கல்...
* பொங்கல் பண்டிகையையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தொண்டர்களுக்கு வாழ்த்து மடல் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள்.
உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை – பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் – ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.
ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ. அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன. ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’, ‘உலகம் உங்கள் கையில்’ உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு.
எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும். 1 கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.
தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று. தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள்.
அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் திமுகவின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி-பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் விழாவையொட்டி தலைமைக் கழகம் அறிவித்தவாறு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரமாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். திமுகவினருக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் – தைப்பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு செல்கிறேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதல்வரான நான் ஜனவரி 17ம் நாள் அதாவது, தை மாதம் 3ம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.
சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
