×

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுவிடுக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க முதல்வர் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நேற்று (13ம் தேதி) அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உள்பட இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடி படகுகளும் இலங்கைவசம் உள்ளது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திட வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளை தடுத்திடவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Chief Minister ,M.K. Stalin ,Union ,Minister ,Chennai ,Minister of External Affairs ,Ramanathapuram district ,Nadu ,Union Minister ,of ,External Affairs… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...