பெத்தலகேம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடந்த திருப்பலியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதேபோல் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது. மின்னொளியில் ஜொலித்த பெத்தலகேமில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்துமசையொட்டி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெத்லகேம் வந்திருந்தனர். சீனாவின் ஷாங்காயில் அரசின் கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கைகளையும் மீறி மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உருமாறிய ஒமைக்ரான் பரவல் காரணமாக மக்கள் ஒரு வாரத்திற்கு வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்திய நிலையில், தனி நபர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மக்கள் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஆகையால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகிறது.
உக்ரைனில் மாற்றம்
ரஷ்யாவை போல உக்ரைனில் கிறிஸ்தவர்கள் ஜூலியன் காலண்டரின் படி ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுவது வழக்கம். ஆனால் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மேற்கத்திய நாடுகள் கலாச்சாரப்படி, நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
