×
Saravana Stores

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள சுனாமி குடியிருப்பு

*குடியேறாத வீடுகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : கலைஞர் ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்பு வீடுகள், புறக்கணிக்கப்பட்டதால் பயனாளிகள் குடியேறாமல் ஏராளமான வீடுகள் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே அ.மணக்குடி கடலோர பகுதியில் பொதுமக்கள் சுனாமி போன்ற பேரிடர்களில் சிக்கி தவிக்க கூடாது என்பதற்காக, 13 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. பல கோடி மதிப்பீட்டில் 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனியார் மூலமாக டெண்டர் விடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

அதன் பிறகு சுனாமி குடியிறுப்பு வீடுகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து பெரும்பாலான வீடுகளில் பயனாளிகள் வீடுகளை பயன்படுத்த முன்வராமல் வீடுகளை பூட்டியே வைத்தனர்.
மேலும் அங்குள்ள வீடுகளில் 60 சதவீதம் வீடுகளுக்கு மேலாகவே பூட்டியே கிடக்கின்றன. இதற்கு காரணம் அந்த சுனாமி குடியிருப்பு வீடுகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அப்பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இந்த காரணத்தால் அங்கு குடியேறிய பயனாளிகள் இன்று வரை சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் அங்குள்ள அனைத்து வீடுகளிலும் பயனாளிகள் குடியேறாலும் முறையான பராமரிப்பு இன்றி வீடுகளை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. இது மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுவதுடன், இனிமேலாவது இந்த வீடுகளை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு உரிய பயனாளிகள் அவரவர் வீடுகளில் குடியேறாமல் இருந்தால், அந்த வீடுகளை வீடு இல்லாமல் வாழ்ந்து வரும் ஏழை,எளியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அப்பகுதியில் குடியிருக்கும் பயனாளி கூறுகையில், கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இங்கு பல கோடி ரூபாய் செலவில் எங்களுக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்தார்கள். வீடு கட்டி கொடுத்த பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அவர்கள் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வரவில்லை. இதனால் இங்கு சீரான மின்சாரம் வருவதில்லை. வீடுகளில் உள்ள மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும் பழுதடைந்து விடுகிறது.

குடிதண்ணீர் வசதியின்றி பல ஆண்டுகளாக டேங்கர்களில் வரும் தண்ணீரை தான் குடம் ஒன்றுக்கு ரூ.7 முதல் 10 வரையிலும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
மேலும் பல வீடுகளில் பயனாளிகள் குடியேறாமல் உள்ளதால் வீடுகளை சுற்றி கருவேல முட்புதர்கள் மண்டி காடு போல் உள்ளது. ஆகையால் முட்புதர்களை அகற்றி தருவதுடன், சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சீரான மின்சாரம், குடி தண்ணீர் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடுகள் இருப்பதால் அவர்கள் அந்த வீடுகளை விட்டு விட்டு வந்து இங்கு குடியேறாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஒரு சிலர் இங்கு சரியான அடிப்படை வசதி இல்லை என கூறி குடியேற மனமின்றி உள்ளனர்.

மேலும் அ.மணக்குடியில் கட்டப்பட்டுள்ள சுனாமி வீடுகளில் வசதி படைத்த வீடு உள்ள நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும், அவர்கள் அதில் குடியேறாமல் இருப்பதால் கருவேல மரங்கள் அடர்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. அந்த வீடுகளை உண்மையான வீடற்ற ஏழை,எளிய பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.



Tags : Tsunami ,RS Mangalam , RS Mangalam : Tsunami residential houses built at a cost of crores of rupees during the artist's regime were neglected and the beneficiaries did not settle.
× RELATED அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி