×

ஸ்டீல், இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டீல் மற்றும் இரும்பு தாதுக்கான ஏற்றுமதி வரியை ரத்து செய்து ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிந்தது. அதில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி (இஇபிசி) 21 சதவீதம் சரிந்து, ரூ.59,200 கோடியாக இருந்தது. குறிப்பாக, இஇபிசி ஏற்றுமதி சரிவிற்கு ஸ்டீல் மற்றும் இரும்பு தாது கட்டிகளின் ஏற்றுமதி சரிவே முக்கிய காரணமாகும். இதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒன்றிய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஸ்டீல் மற்றம் இரும்பு தாது ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல, ஸ்டீல் தொழிலில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் ஆந்த்ராசைட், கோக்கிங் நிலக்கரி மற்றும் பெரோ நிக்கல் மீதான இறக்குமதி வரி பூஜ்யத்தில் இருந்து 2.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உள்நாட்டின் ஸ்டீல், இரும்பு தாது உற்பத்திக்கு ஏற்ப உள்நாட்டு தேவை இருக்கவில்லை. எனவே, ஏற்றுமதியை ஊக்குவிக்க வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு ஸ்டீல் தொழிலுக்கு ஊக்கமளிக்கும், மேலும் ஏற்றுமதியையும் அதிகரிக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Union Government , Union government notification on cancellation of export tax on steel and iron ore
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்