×

காலியாகிறது அஜித்பவார் கூடாரம் 19 எம்எல்ஏக்கள் சரத்பவார் கட்சிக்கு தாவ திட்டம்: மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு

மும்பை: மக்களவை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் அஜித்பவார் அணியில் இருந்து 19 எம்எல்ஏக்கள் சரத்பவார் அணிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டே முதல்வரானார். பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வரானார்.

அடுத்த ஆண்டு அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் வெளியேறி ஷிண்டே அரசில் சேர்ந்து மற்றொரு துணை முதல்வரானார். சிவசேனா கட்சி சின்னம் ஷிண்டேவுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னம் அஜித்பவாருக்கும் உரிமை உடையது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த கூட்டணி மகாயுதி கூட்டணி என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. ஆனால், பெரும் பின்னடைவை சந்தித்தன.

பாஜ 9, ஷிண்டே சிவசேனா 8 இடங்களிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இது அஜித்பவாருக்கு செல்வாக்கு இல்லை என்பதையும், உண்மையான தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் என மக்கள் ஏற்றுக் கொண்டதையும் காட்டுவதாக அமைந்தன. பாராமதியில் அஜித்பவார் அணி தோற்றதும், சரத்பவாருக்கு ஆதரவளிப்பதை உணர்ந்த எம்எல்ஏக்கள், இந்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் சரத்பவார் அணிக்கே செல்ல முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

19 எம்எல்ஏக்கள் சரத்பவார் அணிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது கட்சித் தாவ திட்டமிட்டிருக்கும் எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே வேளையில், ஷிண்டே அரசுக்கு அஜித்பவார் வருவதற்கு முன்பே பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், 19 எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதன் மூலம் ஷிண்டே அரசு கவிழ வாய்ப்பில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தாலும் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில், ஆளும் கூட்டணி ஆட்டம் காணுவது மகாராஷ்டிர அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அஜித்பவார் நேற்று கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 5 எம்எல்ஏக்கள் பங்கேற்காதது, அவர்கள் அணி மாறுவதை உறுதி செய்ததாக அமைந்துள்ளது.

* கட்சி, சின்னம் கைமாறுமா?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வெற்றி பெற்றது. அஜித்பவார் கட்சியை உடைத்து வெளியேறியபோது, அவருக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருப்பதை கருத்தில் கொண்டு கட்சி, சின்னத்தை அவரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம். தற்போது 19 எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களை தொடர்ந்து பிற எம்எல்ஏக்களும் சரத்பவார் பக்கம் சென்றால், பெரும்பான்மை அடிப்படையில் கட்சி, சின்னம் சரத்பவாருக்கு மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post காலியாகிறது அஜித்பவார் கூடாரம் 19 எம்எல்ஏக்கள் சரத்பவார் கட்சிக்கு தாவ திட்டம்: மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ajitpawar ,Sarathpawar ,Maharashtra ,Mumbai ,Mahayudi alliance ,Lok Sabha elections ,Ajit Pawar ,Sharad ,Pawar ,Dinakaran ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் 19...