×

பளபளக்கும் சாலைகள் வரப்போகுது பட்டாசு நகருக்கு... சிவகாசி மாநகராட்சியாகி ஓராண்டு நிறைவானது: உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து, நேற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி கடந்த 1920ல் நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1978-ம் ஆண்டில் முதல் நிலை நகராட்சியாகவும், 1998ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

2020ம் ஆண்டு சிவகாசி நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடிய போது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதில், ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால், முதற்கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்.21-ம் தேதி முதல் மாநகராட்சி செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தென் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமான சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், தொழில்துறையினர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

பெரு நகரங்களுக்கு இணையாக அடிப்படை வசதிகள், அரசின் சேவைகள் கிடைக்கும் என சிவகாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சிவகாசி மாநகராட்சி அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.  சிவகாசி மாநகராட்சியில் நகர்நல அலுவலர், நகர் பொறியாளர், நகரமைப்பு அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள், கல்வி அலுவலர் என 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய மாநகராட்சி மேயர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மாநகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம், 2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நூற்றாண்டு நிதி ரூ.49.2 கோடி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறுகையில், சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்ததும் பணிகள் தொடங்கப்படும். பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும்’ என்றார்.

தென்னகத்தின் குட்டி ஜப்பான்
சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழில், தீப்பெட்டி தொழில் அதிகளவில் நடந்து வருகிறது. நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இங்கிருந்து இந்தியா முழுவதும் பட்டாசுகள் சப்ளை செய்யப்படுகிறது. நமது நாட்டிற்கு தேவையான பட்டாசில் 90 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. தொழில் வளத்தால் சிவகாசியை தென்னகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கின்றனர். தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

Tags : Batasu City ,Sivakasi , Shining Roads, Patasu Nagar, Sivakasi Corporation, Infrastructure Facility,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து