×

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் அவருக்கு மட்டுமே தெரியும் சசிகலா தாய் அல்ல… பேய்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்கு

திண்டுக்கல்: ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் தாய் அல்ல… பேய் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு  பேட்டி அளித்துள்ளார். திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட  நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், சசிகலாவிடம் யாரும் பேசக்கூடாது. அவரிடம் யாரும் தொடர்பு  வைத்துக் கொள்ளக் கூடாது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பேட்டி: சசிகலா கட்சியில் உறுப்பினரே கிடையாது. அவரது செயல்பாடு வேடிக்கையாக உள்ளது.  அதிமுகவை பொறுத்த வரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கவுரவமான, வெற்றிகரமான தோல்வி தான். இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்கிறார். சசிகலாவை ஜெயலலிதாவே நீக்கினார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதற்கு காரணம் சசிகலா தான். நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார். ஆனால் அவர் நம்பிக்கையாக நடக்கவில்லை. துரோகம் தான் செய்தார். ஜெயலலிதா இறப்பில் ஏதோ நடந்துள்ளது, என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும் தான் தெரியும். ஓபிஎஸ்சுக்கு எதுவும் தெரியாது. சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சியில் அதிகாரம்  செலுத்தினர். தற்போது சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அதிமுகவை பொறுத்தவரை அவர் தாய் அல்ல. பேய். இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் யாரும், சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. அதிமுக தொண்டர்கள் யாரும் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்….

The post ஜெயலலிதா மரணத்தின் மர்மம் அவருக்கு மட்டுமே தெரியும் சசிகலா தாய் அல்ல… பேய்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Jayalalithah ,Sasigala ,minister ,Natham Viswanathan ,Dintugul ,Former Minister ,Nanna Viswanathan ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...