×

பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்: அதிமுக மாஜி அமைச்சர்கள் யாரும் இணையவில்லை

ஈரோடு: தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசவாடி அருகே இன்று காலை நடக்கும் பிரசார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.

பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்ட செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எங்களை பொறுத்தவரை தேவையான வசதிகளை செய்துள்ளோம். மாவட்ட எஸ்பி.யும் கூட்டம் நடக்கும் இடத்தில் ஆய்வு செய்து, கூடுதல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த பணிகளையும் நிறைவு செய்ய உள்ளோம். விஜய் நின்று பேசுகின்ற இடத்தில் இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு அரண் அமைத்துள்ளோம். போலீஸ் விதித்த நிபந்தனைக்கான அபிடவிட் தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய போகிறார்களா? என்ற கேள்விக்கு ‘பொறுத்து இருந்து பாருங்கள். இப்போது கூற முடியாது. அதை சொன்னால் அதை தடுத்து விடுவார்கள்’ என்றார். தவெகவில் இணைய அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு செங்கோட்டையன் வலைவிரித்தும் இதுவரை யாரும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. இன்று நடக்கும் நிகழ்ச்சியில் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மட்டும் சேர உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமமுகவில் சேர்ந்தார். பின்னர், அங்கிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். தற்போது தவெகவில் இணைய தயாராகி உள்ளார். கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையன் மற்றும் தவெக முன்னணி நிர்வாகிகள், விரைவில் அதிமுக மாஜி அமைச்சர்கள் இணைவார்கள் என பில்டப் செய்து வந்தனர். ஆனால், அதிமுக மாஜி அமைச்சர்கள் யாரும் இணையவில்லை என்ற தகவல் நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

‘அண்ணாமலைக்கு பதில் சொல்ல நேரம் இல்லை’
திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரச்னைக்கு விஜய் ஏன் பேசவில்லை என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘அண்ணாமலைக்கு இப்போது பதில் சொல்ல நேரம் இல்லை. இந்த கூட்டத்தினை சிறப்பாக நடத்த வேண்டும் என ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது’ என்றார்.

Tags : Vijay ,Perudura ,Erode ,Dweka ,Karur district ,Tamil Nadu ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில் சதி அம்பலம்;...