×

பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்

திருவாரூர் : பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு ரூ.5,89,646 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மேலமருதூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திகை வாசன், குமாரி, பாலசுப்ரமணியன், சுப்புலெட்சுமி, செல்வி என்கிற 5 விவசாயிகள் இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு கழகத்தில் பிரிமியம் செலுத்தி உள்ளனர். அந்த ஆண்டில் பெய்த கனமழையால் மேலமருதூர் கிராமத்தில் 70 சதவிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அதனை முறையாக கணக்கிடாமல் வருவாய் துறை அதிகாரிகள் 3 விவசாயிகளுக்கு ஹெக்டர் கணக்கை குறைத்து, இன்சூரன்ஸ் தொகையை குறைவாக கொடுத்துள்ளார்கள். இதனால், விவசாயிகள் தங்களுக்கு 2020-2021ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தங்களுக்கு முறையாக கணக்கிட்டு வழங்கப்படவில்லை என 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து இந்த வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில் விவசாயிகளுக்கு மீதம் உள்ள தொகை கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மனஉளைச்சல், பொருள் நஷ்டம், சேத குறைபாடு செய்ததற்காகவும், வழக்கு செலவு தொகை 5 விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் மொத்தம் ரூ.5,89,646 தொகையை மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குனர், இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு கழகத்தின் பொது மேலாளர், மற்றும் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் செயலாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ இந்த தொகையை கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதாக கருதி இந்த தீர்ப்பை ஆணையம் வழங்கியுள்ளது. 


Tags : Thiruvarur District Collector , Crop, Insurance, Penalty to Collector, Thiruvarur, for non-accounting
× RELATED வடசங்கந்தி ஊராட்சியில் மக்கள்...