புதுக்கோட்டை : மணமேல்குடியல அடுத்த தினையாகுடி மயானத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியால் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தினையாகுடி கிராமத்தில் இறந்தவர்களை மாவிலங்காவமல் ஏரி பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்வது வழக்கம். இதற்காக கிராம மக்கள் சடலங்களை வயல்வெளியில் தோளில் பாடைகட்டி தூக்கி செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
கடந்த காலங்களில் ஆண்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் சடலங்களை தூக்கி செல்வது எளிதாக இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் வெளியூர்களில் வசித்து வருவதால் சடலங்களை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் வயல்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை சேதப்படுத்தியே சடலங்களை தூக்கி செல்லும் நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இந்த நிலையில் அறந்தாங்கியில் இருந்து நிலையூர் செல்லும் சாலையிலிருந்து தினையாகுடி மயானம் வழியாக மாவிளங்கா வயல் தெற்கு குடியிருப்பிற்கு தினையாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சத்யாமூர்த்தி ஏற்பாட்டில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பணிகளை மேற்கொண்டபோது ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தினையாகுடி கிராமத்தினர் ஒத்துழைப்புடன் பொதுப்பணித்துறை வாய்க்காலின் கரையில் சாலை அமைக்க ஊராட்சி ஒன்றிய மூலம் உரிய அனுமதியை பெற்றனர்.இதைத்தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து நிலையூர் செல்லும் சாலையில் இருந்து தினையாகுடி மயானம் வழியாக மாவிளங்காவயல் தெற்கு குடியிருப்புக்கு செல்லும் சாலை பணி நடைபெற்றது. பொதுப்பணித்துறை வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பைப்புகள் பதிக்கப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினையாகுடி மயானத்திற்கு சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையை மாற்றி சாலை வசதி செய்து கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், அதற்கு முயற்சி எடுத்த தினையாகுடி ஊராட்சி மன்ற தலைவருக்கும் தினையாகுடி கிராமத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
