×
Saravana Stores

சிறுமலை அடிவார கிராமங்களில் அறுவடைக்கு தயாரான பன்னீர் திராட்சைகள்-1 கிலோ ரூ.50க்கு விற்பனை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகேயுள்ள சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 வருடங்களாக திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது.

மண்வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீர்களால் இப்பகுதியில் விளையும் திராட்சைகள் நன்கு ருசியுடன் இருப்பதாலும், நல்ல நிறத்துடன் திராட்சைகள் வளர்வதாலும் தமிழகம் மற்றும் கேராளவில் இப்பகுதி திராட்சைகளுக்கு தனி மவுசு உண்டு. கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அடுத்தாற்போல் சின்னாளபட்டி அருகே ஜாதிக்கவுண்டன்பட்டி, காமலாபுரம், கொடைரோடு பகுதியில் தான் திராட்சைகள் அதிகளவில் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டுக்கொடி திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை என்ற பெயருடன் இங்கு விளைவிக்கப்படும் திராட்சை அறுவடை செய்யப்பட்டு 10 நாட்கள் வரை உதிராமல் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜாதிகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி கருப்பையா கூறுகையில், ‘ஒவ்வொரு வருடம் தண்ணீர் சரிவர பாய்ச்ச முடியாததால் திராட்சை விவசாயம் பாதிக்கும். மறுவருடம் காய்கள் கனிந்து வரும்போது மழை வந்து கெடுத்துவிடும். தற்பொழுது எந்த பிரச்னையும் இல்லாமல் பழங்களை அறுவடை செய்யும் போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கினால் பழுத்துள்ள திராட்சைகள் கொடியிலேயே நோய்கள் தாக்கி அழுகிவிடும். ஆனால் தற்போது கோடைமழை மட்டும் பெய்திருப்பதால், திராட்சைக்கு பாதிப்பில்லை. தற்போது ஒரு கிலோ திராட்சை ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 நாட்கள் கழித்து அறுவடை செய்யும் போது திராட்சை விலை இன்னும் ஏற்றமாக இருக்கும்’ என்றார்.

Tags : Sirumalai , Chinnalapatti: The foothills of Sirumalai near Chinnalapatti include Vellodu, Perumalkovilpatti, Amalinagar, J. Uthupatti,
× RELATED சாணார்பட்டி அருகே...