×

தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி

டெல்லி : தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.சுதந்திரப் போராட்ட காலத்தின்போது தீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிட்டனர். அந்த தினத்தையும் தியாகிகள் தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த தியாகிகள் தினமான இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியத் தாயின் அழியாப் புதல்வர்களான வீர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தியாகிகள் தினத்தில் புகழஞ்சலி. தாய்நாட்டிற்காக இன்னுயிரை இழக்கும் அவர்களின் உணர்வு நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். ஜெய் ஹிந்த்!” எனத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு அரங்கில் புரட்சிகர இந்தியா கலைக்கூடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வின் போது திரண்டிருப்போரிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பையும், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிரான அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் இந்தக் கலைக்கூடம் சித்தரிக்கிறது. விடுதலை இயக்கத்தின் முக்கியமான தொகுப்புகளின் இந்த அம்சத்திற்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை. 1947-க்கு வழிவகுத்த ஒட்டு மொத்த நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், புரட்சியாளர்களின் முக்கியமான பங்களிப்பை எடுத்துரைப்பதும் இந்தப் புதிய கலைக்கூடத்தின் நோக்கமாகும்.



Tags : Narendra Modi ,Bhagat Singh ,Sugadev ,Rajaguru , Martyrs' Day, Bhagat Singh, Sukhadev, Rajguru, Prime Minister Narendra Modi, Praise
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!